இந்தியா

'உலகில் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் மூன்றாவது நாடு இந்தியா' - ஆய்வறிக்கை

Veeramani

உலகிலேயே ராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உலகளாவிய பாதுகாப்புச் செலவினம் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக உலகில் மூன்றாவதாக அதிக இராணுவச் செலவு செய்யும் நாடு இந்தியாவாகும் என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) கூறியுள்ளது.

SIPRI வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்கா, சீனா, இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ரஷ்யா ஆகிய முதல் ஐந்து நாடுகளின் இராணுவ செலவினங்கள், உலகளாவிய இராணுவ செலவினத்தில் 62 சதவீதத்தைக் கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ல் இருந்து 0.9 சதவீதம் அளவுக்கு இந்தியாவின் ராணுவ செலவு அதிகரித்து 2021ல் 76.6 பில்லியன் டாலர்களாக உள்ளதாகவும், இது 2012 ஆம் ஆண்டைவிட 33 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் SIPRI கூறியது. “சீனா மற்றும் பாகிஸ்தானுடனான தற்போதைய பதட்டங்கள் மற்றும் எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா தற்போது அதன்  பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளது” என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலக இராணுவச் செலவில் அமெரிக்கா 38 சதவீதத்தையும், சீனா சுமார் 14 சதவீதத்தையும் கொண்டுள்ளது. சீனாவின் இராணுவச் செலவு தொடர்ந்து 27வது ஆண்டாக வளர்ந்துள்ளதாகவும் இந்த  அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதேபோல், ரஷ்யாவும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது.