N Rangasamy web
இந்தியா

முதல்வர் பதவியேற்பு விழா.. ஜோதிட நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்த சம்பவம்!

நல்ல நேரம் பார்த்து 9:47க்கு பதவியேற்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அரசு செயல்பாடுகளிலும் நல்ல நேரம் பார்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

PT WEB

புதுச்சேரி முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பதவியேற்ற என். ரங்கசாமி, ஜோதிட நம்பிக்கையை முன்னிறுத்தி காலை 9:47 என்ற குறிப்பிட்ட நல்ல நேரத்தில் கையெழுத்திட்டு பதவியேற்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள், பல கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், அரசு செயல்பாடுகளிலும் ஜோதிட நேரம் பார்க்கப்படுவது குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான முதலமைச்சராக என். ரங்கசாமி இன்று ஐந்தாவது முறையாக பதவியேற்றார். லோக் பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாநில அரசியல் சூழலில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

N Rangasamy

முதலமைச்சர் ரங்கசாமி ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பது அரசியல் வட்டாரங்களில் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. முக்கிய முடிவுகள், தேர்தல் பணிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கூட அவர் நல்ல நேரத்தை கவனிப்பது வழக்கமாக இருந்து வருகிறது

அதன்படி, இந்த பதவியேற்பு விழாவுக்கும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலை 9:47 மணிக்கு பதவியேற்பு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அழைப்பிதழிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

விழா திட்டமிட்டபடி நடைபெற்ற நிலையில், காலை 9:46 மணியளவில் ரங்கசாமி ரகசிய காப்பு பிரமாணத்தை முழுமையாக வாசித்து முடித்தார். ஆனால் உடனடியாக கையெழுத்திடாமல் சில விநாடிகள் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

N Rangasamy

அதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நல்ல நேரமாக கருதப்பட்ட 9:47 மணி அடைந்ததும் அவர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் அவர் மீண்டும் முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வை விழாவில் இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கவனித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக நேரம் குறித்து காட்டப்பட்ட இந்த துல்லியம் பேசுபொருளாக மாறியுள்ளது.

ரங்கசாமியின் இந்த ஜோதிட நம்பிக்கை சம்பவம், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு செயல்பாடுகளில் கூட நல்ல நேரம் பார்க்கப்படுவது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அலுவலகத்தில் ஜோதிடர் ராதன் பாண்டே வெற்றிவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்டை மாநில அரசியல் நடைமுறைகளும் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.

vijay & Radhan Pandit

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரங்கசாமியின் ஐந்தாவது ஆட்சிக்காலம் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.