இந்தியா

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்? - வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணி தீவிரம்

webteam

வருகிற 2023-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டப் பிறகு முதல் முறையாக அடுத்த வருடம் ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது மற்றும் விடுபட்டுள்ளோர் பெயர்களை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஜம்மு பகுதியில் ஐந்து கூடுதல் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் காஷ்மீர் பகுதியில் கூடுதலாக ஒரு சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை உருவாக்குவதற்கான சிபாரிசு அடுத்த வருட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்படும் என கருதப்படுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உடனே மத்திய அரசு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக செயல்படுவதற்கான நடைமுறைகளை அறிவித்தது. அதன்படி லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டு வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி ஜம்மு பகுதியில் அதிகப்படியான இடங்களையும், அப்போது முஃப்தி முகமது சையத் தலைமையில் செயல்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி காஷ்மீர் பகுதியில் அதிகப்படியான இடங்களையும் கைப்பற்றி இருந்த நிலையில், இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைத்தன. 2016-ம் வருடத்தின் தொடக்கத்தில் முஃப்தி முகமது சையத் காலமானதால், கூட்டணியில் குழப்பம் நிலவியது. பின்னர் மெஹபூபா முஃப்தி தலைமையில் மீண்டும் அதே கூட்டணி ஆட்சி அமைத்தது. பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக, பாரதிய ஜனதா கட்சி 2018-ம் வருடம் ஜூன் மாதத்தில் கூட்டணியில் இருந்து விலகியது. மெஹபூபா முஃப்தி அரசு கவிழ்ந்த நிலையில், சட்டசபை கலைக்கப்பட்டது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது அரசு அமைந்த நிலையில், அதிரடியாக மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டப்பிரிவு 370வதை ரத்து செய்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது. நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை பெரும் அதே நேரத்தில், மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான ஒப்புதலையும் பெற்றது. அதன்படியே மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி முதல் 2 யூனியன் பிரதேசங்களானது.

அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு முன்னர், மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் புதியத் தொகுதி வரையீட்டை அமல்படுத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட சமயத்தில் காஷ்மீரில் பெரிதாக வன்முறை வெடிக்கும் என அச்சம் நிலவியது. தீவிரவாதிகள் பொதுமக்களை சுட்டுக் கொள்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் அதிர்ச்சி அளித்த போதிலும், ராணுவம் மற்றும் துணை ராணுவங்களின் உதவியோடு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2014-ம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் 23 சதவிகித வாக்குகளுடன், பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களை கைப்பற்றியது. மக்கள் ஜனநாயகக் கட்சி 22.7 சதவிகித வாக்குகளுடன் 28 இடங்களை கைப்பற்றியது. தேசிய மாநாடு கட்சி 21 சதவிகித வாக்குகளுடன் 15 இடங்களை கைப்பற்றி, மூன்றாவது இடத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 18 சதவிகித வாக்குகளுடன், 12 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி காஷ்மீர் பகுதியில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய நிலையில், அங்கே காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஜம்மு பகுதியில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய அளவுக்கு ஆதரவு உள்ளது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், அடுத்த வருடம் எதிர்பார்க்கப்படும் தேர்தல் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த வருடம் சட்டைசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் சட்டங்கள் ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயங்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதும் இதில் அடக்கம். இந்த மாற்றங்களின் அரசியல் தாக்கம் அடுத்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்