நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் pt web
இந்தியா

நாடாளுமன்றம் 2001 தாக்குதல் & 2023 அத்துமீறல்; நாம் கற்றுக்கொண்ட பாடம்தான் என்ன?

PT WEB

முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2001 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல இப்போதும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது.

காலிஸ்தான் தீவிரவாதி வெளியிட்ட வீடியோ

குறிப்பாக, அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் தீவிரவாதி குட்பட்வந்த் சிங் பன்னுன் (GUTPATWANT SINGH PANNUN) டிசம்பர் 13 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கப்போவதாக கூறிய வீடியோ வெளியாகி இருந்தது. 2001ல் நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தியதால் துக்கிலிடப்பட்ட தீவிரவாதி அஃப்சல் குருவின் புகைப்படத்திற்கு முன்பாக நின்று இந்த வீடியோவை வெளியிட்டிருந்ததால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் 2001-லும் சரி, 2023 லும் சரி முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. 2001 மற்றும் 2023 சம்பவங்களின்போதும் மத்தியில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதாவே இருக்கிறது.

இரு சம்பவங்களிலும் நடந்தது என்ன?

2001 ல் அம்பாசிடர் காரில் வந்தவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்தனர். 2023 ல் பாஜக எம்பியிடம் இருந்து கடிதம் பெற்று எம்பி. பாசுடன் நாடாளுமன்றத்திற்குள்ளே வந்திருக்கிறார்கள். 2001 சம்பவத்தின்போது தீவிரவாதிகள் நுழைந்த உடனேயே நாடாளுமன்ற வளாகத்தின் அனைத்து கேட்களும் மூடப்பட்டன. அதனால் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே தப்பிச்செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த முறை அத்தகைய எந்த நடவடிக்கையும் இல்லாமல் அனைத்து கதவுகளும் திறந்தபடியே இருந்திருக்கின்றன.

நாடாளுமன்றம்

எந்த பாடமும் கற்கவில்லையா?

சம்பவத்தை ஆராய்ந்து பார்த்தோமானால், 2001 சம்பவத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் எந்த பாடமும் கற்கப்படவில்லை. இதுபோன்ற அத்துமீறும் சம்பவங்களில் என்ன செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை கூட பின்பற்றப்படவில்லை. அத்துமீறிய நபர்களை எம்.பிக்களே சுற்றிச்சூழ்ந்து பிடித்திருக்கிறார்கள்.

பாதுகாவலர்களோ வேறு யாருமோ உடனடியாக வரவில்லை. வண்ணப்புகை வீச்சு நடந்தநிலையில் அங்கிருந்த எம்பிக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரோட்டோகால் பின்பற்றப்படவில்லை.

இதற்கு முன்பாகவும் புதிய நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்திருக்கிறது. அண்மையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும், அதிர்ரஞ்சன் சௌத்ரி மற்றும் ஜெயா பச்சன் பேசும்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுவும் ஒருவகை அத்துமீறலே என்றாலும் அப்போது காங்கிரசுக்கு எதிரான முழக்கங்களே எழுப்பப்பட்டதால் பெரிய அளவில் பிரச்னையாக மாறவில்லை. இப்போதும் எதிர்ப்பாளர்கள் வீசியது வண்ணப்புகைதான் என்று சொல்லப்படுகிறது. வண்ணப்புகைக்கு பதிலாக நச்சுப்புகையோ அல்லது ஆபத்து விளைவிக்கும் அம்சங்களோ இருந்தால் என்னவாகியிருக்கும்? அந்த அடிப்படையில் சிந்தித்தால் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.