கடந்த இரண்டு நாட்களில், அசாமில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள ஹோட்டல்கள், இறைச்சிக்கூடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1084 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அதனை சட்டவிரோதமாக விற்ற 130 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் கால்நடை பாதுகாப்பு சட்டத்தை (2021) கடுமையாக அமல்படுத்தப்போவதாக சர்மா கூறியிருந்தார். இந்தச் சட்டம் மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவில்லை.
என்றாலும், இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் பிற மாட்டிறைச்சி உண்ணாத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்த எந்தவொரு கோயில் அல்லது பிற மத நிறுவனங்களின் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் ஒரு பிரிவு அதில் உள்ளது. மேலும், தகுதிவாய்ந்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மாட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சி பொருட்களை விற்பனை செய்ய அந்த சட்டம் அனுமதிக்கிறது.
இந்த சட்டத்தின்படி, குவஹாத்தி, நாகோன், சரைடியோ, கோக்ரஜார், தெற்கு காம்ரூப் மற்றும் திப்ருகார் ஆகிய இடங்களில் உள்ள 112 ஹோட்டல்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில், மாட்டிறைச்சி என சந்தேகிக்கப்பட்ட பல கிலோ இறைச்சிகள் கையகப்படுத்தப்பட்டன.
காவல்துறையினரின் கூற்றுப்படி, 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 1084 கிலோ சந்தேகத்திற்கிடமான மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.