அசாமின் 126 சட்டமன்றத் தொகுதிகளில் நாகோன் மாவட்டத்தில் உள்ள சமகுரி தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் முஸ்லிம் இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 2001 முதல் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் இந்தத் தொகுதியில், கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி அரசு வெற்றிபெற்றது.
பாஜகவின் திப்லு ரஞ்சன் சர்மா, மூத்த காங்கிரஸ் தலைவர் ரகிபுல் ஹுசைனின் செல்வாக்கை அப்பகுதியில் அகற்றினார். சர்மா 24,423 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஹுசைனை தோற்கடித்தார். இந்த வெற்றியை ஆளும் பாஜக மட்டுமல்லாது, அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கொண்டாடி மகிழ்ந்தன. இதே வெற்றியை அடிமட்டத் தொண்டர் ஒருவரும் கொண்டாடியிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது. அசாமின் பாஜக அரசில், அசாம் கண பரிஷத் (ஏஜிபி) கட்சி கூட்டணியில் உள்ளது. இது, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டராக தேப்நாத் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஏஜிபி, இத்தொகுதியில் பெருத்த தோல்வியைச் சந்தித்தது. அதனால், அக்கட்சியை சேர்ந்த ஒரு தொண்டர், மிகவும் வேதனைப்பட்டுள்ளார். அத்துடன், அந்த ஆண்டே ஒரு சவாலையும் எடுத்துள்ளார்.
அதன்படி அவர் “இனி, ஏஜிபி இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் வரை, நான் கால்களில் செருப்பு அணிய மாட்டேன்” என சவால் விடுத்ததுடன், அதன்படியே இந்த 24 ஆண்டுகளையும் கடத்தியுள்ளார். அவர், கட்சி மற்றும் சொந்த வேலை என எதுவாக இருந்தாலும், எங்குச் சென்றாலும் செருப்பு அணியாமலேயே சென்று வந்துள்ளார். இதைப் பார்த்து காங்கிரஸின் தொண்டர்கள் அவரைக் கிண்டல் செய்துள்ளனர். என்றாலும் அதைப் பற்றி கவலைப்படாது வெறுங்காலுடனேயே நடந்து சென்றுள்ளார்.
தற்போது கூட்டணியில் உள்ள அந்தக் கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தேப்நாத் மனமகிழ்ச்சியடைந்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த விஷயம் அம்மாநிலத்தின் மூத்த ஏஜிபி தலைவரும் தற்போதைய மாநில அமைச்சருமான கேசப் மஹந்தாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 22ஆம் தேதி தேப்நாத்தின் வீட்டிற்குச் சென்ற கேசப், அவருக்கு இரண்டு ஜோடி புதிய செருப்புகளை வழங்கினார். இதனால், அவர் மேலும் ஆனந்தமடைந்தார். இதையடுத்து, தேப்நாத்தின் 24 ஆண்டுகால சவால் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவர், “திமுக எனும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும்வரை நான் செருப்பு போடப்போவதில்லை” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.