அசாமின் நல்பாரி மாவட்டத்தில் வசிப்பவர் மாணிக் அலி. இவருக்குத் திருமணமாகி தனது மனைவியுடன் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில், மாணிக் அலியின் மனைவி, அவரது காதலருடன் அடிக்கடி சென்றிருக்கிறார். இதனால், மாணிக் அலி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில் மனைவியிடம் பேசி, இருவரும் சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி, அவருக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதைத்தான் அவர் சந்தோஷமாகக் கொண்டாடியுள்ளார். அதற்காக அவர் 40 லிட்டர் பாலை தன் உடலில் ஊற்றிக் குளித்துக் கொண்டாடியுள்ளார். மேலும், ‘இன்று முதல் நான் சுதந்திரமானவன்' என அறிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப அமைதிக்காக பொறுமை காத்து வந்ததாகவும், இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும், இதனால் இன்றைய தினம் தனக்கு சுதந்திர நாள் என்றும் மாணிக் அலி கூறியுள்ளார்.
முன்னதாக, இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு ஆடம்பரமான விவாகரத்து விருந்தை நடத்தினார். அது விரைவில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியது. ஹரியானாவைச் சேர்ந்த மஞ்சீத் என்பவர் 2020இல் கோமல் என்ற பெண்ணை மணமுடித்தார். இருப்பினும், அவர்களது திருமணம் 2024இல் விவாகரத்தில் முடிந்தது. அந்த நிகழ்வை கேக் வெட்டி ஒரு பெரிய கொண்டாட்டத்துடன் கொண்டாடினார். மஞ்சீத்தின் முன்னாள் மனைவியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் ஒரு பொம்மையும் இருந்தது. அதனுடன் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். மஞ்சீத்தின் இந்த விவாகரத்து விருந்தின் வீடியோ ஆன்லைனில் பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியது.