இந்தியா

அசாம்: இடுப்பளவு வெள்ளத்தில் பிறந்த குழந்தையை சுமந்து சென்ற தந்தை - வைரலாகும் வீடியோ

JustinDurai

அசாம் மாநிலத்தில் இடுப்பளவு வெள்ளத்தில் ஒருவர், தனது குழந்தையை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அசாம் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. தொடர்மழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 80க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 47 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சில்ச்சார் பகுதியில் இடுப்பளவு சூழ்ந்துள்ள வெள்ளத்தில், ஒருவர் தனது குழந்தையை சுமந்தபடி சாலையைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் அவர் புன்னகைத்தபடி சாலையை கடந்து செல்வது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாசுதேவர் குழந்தை கிருஷ்ணரை சுமந்துகொண்டு யமுனை நதியை கடந்ததுபோல், அவர் தனது குழந்தையுடன் கடந்து செல்வதாக ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.