இந்தியா

தனக்கு பிளாஸ்மா தானம் அளித்தவரின் கால்களைக் கழுவி நன்றிக்கடன் செலுத்திய துணை சபாநாயகர்!

JustinDurai

அஸ்ஸாம் சட்டமன்ற துணை சபாநாயகராக இருப்பவர் அமினுல் ஹக் லஸ்கர். இவருக்கு கடந்த ஜூலை 28-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மேலும் மூச்சுத்திணறல் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இல்லாததால், அவரது சிகிச்சைக்காக குவஹாத்தியிலிருந்து பிளாஸ்மா கொண்டு வர வேண்டியிருந்தது.

பிளாஸ்மா தெரபி சிகிச்சையின் விளைவாக பூரண நலத்துடன் குணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த  ஆகஸ்ட் 8-ம் தேதி லஸ்கர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு பிளாஸ்மா தானம் செய்த நபிதுல் இஸ்லாம் லஸ்கர் என்பவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, அவருடைய கால்களை கழுவி மரியாதையை செய்தார்.

இதுகுறித்து துணை சபாநாயகர் அமினுல் ஹக் லஸ்கர் கூறும்போது, ''பிளாஸ்மா நன்கொடையாளர்கள் மனித உயிர்களை காக்கிறார்கள். நான் கொரோனா தொற்றுக்குள்ளான போது, அறிமுகமில்லாத ஒருவரால் நன்கொடை செய்யப்பட்ட பிளாஸ்மா என் உயிரைக் காப்பாற்றியது. நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஆனால் பிளாஸ்மா தானம் செய்தவரின் வழியாக கடவுளை காண்கிறேன்’’ என்றார்.