கடவுள் சொன்னதால் மகளை ஆற்றில் தள்ளியதாகக் கூறிய தந்தையை, போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ (35). இவர் மனைவி ஜூனு (30). இவர்கள் மகள் ரிஷிகா (2 வயது). கடந்த சனிக்கிழமை குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற பீர்பால், சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்குத் தனியாக வந்தார். அவர் மனைவி, குழந்தை எங்கே? என்று கேட்டபோது, அருகில் ஓடும் போர்லா ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ஜூனு உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் விரைந்து சென்று குழந்தையை ஆற்றில் தேடினர். கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தேடி, குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
போலீசார் பீர்பாலை கைது செய்து விசாரித்தபோது, ‘’கடவுள் என் கனவில் வந்து இப்படி செய்யச் சொன்னார். அதனால் மகளை ஆற்றில் வீசினேன்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால், பிறகு பில்லி சூனியத்தை நம்பினார் என்றும் மந்திரவாதி ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இப்படி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் மனநிலை சரியில்லாதவர் போல இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், மந்திரவாதியின் தூண்டுதலால் இதை செய்தாரா? என்பது பற்றி விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
பெற்ற மகளை, தந்தையே ஆற்றில் வீசிக்கொன்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.