இந்தியா

மாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது!

மாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது!

webteam

மாடல் ஒருவரைக் கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து ரோட்டில் வீசிவிட்டு தப்பியோடிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்‌ஷித். வயது 20. மாடல் ஆகும் ஆசையில் இருந்தவர் அதற்காக மும்பை வந்துள்ளார்.  இவருக்கு மும்பையில் பி.காம் படித்துக்கொண்டிருக்கும் முஸாமில் சையத் (19) என்பவர் தொடர்பு, கிடைத்தது. சையத், ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்தவர். இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்துள்ளார் சையத். சென்றார் மான்சி. 

அப்போது அவர்களுக்குள் என்ன பிரச்னையோ தெரியவில்லை. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஆயுதத்தால் மான்சியை தாக்கியுள்ளார் சையத். இதில் மயங்கி விழுந்த அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் மான்சியின் உடலை சூட்கேஸ் ஒன்றுக்குள் மடக்கி திணித்துள்ளார்.

பிறகு ஓலோ காரை ஆப் மூலம் புக் செய்தார் சையத். கார் வந்ததும் டிக்கியில் அந்த சூட்கேஸை போட்டுவிட்டு விமான நிலையம் செல்ல வேண்டும் என்று சொன்னார் சையத். டிரைவர் காரை இயக்கினர். சிறிது தூரம் சென்றதும் காரை, மலாடுக் குத் திருப்பச் சொன்னார். திருப்பினார் டிரைவர்.

மலாடு அருகே சென்றபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்த சொன்ன சையத், சூட்கேஸை இறக்கி விட்டு ஓலா டிரைவரை அனுப்பிவிட்டார். பிறகு அந்தப் பகுதியின் ஓரத்தில் சூட்கேஸை போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார்.

அந்த ஓலா டிரைவர், அடுத்த சில நிமிடங்களிலே அந்த இடத்துக்குத் திரும்பி வந்து பார்த்தார். சையத் கொண்டு வந்த சூட்கேஸ் ஓரத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார். அவர்கள் விரைந்து வந்து அதைத் திறந்து பார்த்தனர். உள்ளே இளம் பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து அந்த உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்குள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்தனர். அப்போது சையத், சூட்கேஸை போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிச் செல்லும் காட்சிப்பதிவுகள் கிடைத்தன. விரைந்து செயல்பட்ட போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று சையத்தை அமுக்கி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.