neeraj yadav neeraj yadav instagram
இந்தியா

மூன்று முறை தங்கப் பதக்கம்.. இந்திய வீரருக்கு நேர்ந்த சோகம்? நடந்தது என்ன?

இந்தியாவுக்காக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் யாதவ் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல், இந்திய விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நீரஜ் யாதவ். 42 வயதான இவர், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய இரு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். இதன்மூலம், இந்தியாவுக்காக மூன்று முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சாதனையை படைத்த வீரரானார் நீரஜ் யாதவ்.

neeraj yadav

சிறுவயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நீரஜ் யாதவ், பல்வேறு தடைகளைக் கடந்து, தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் முன்னேறி பாரா விளையாட்டு உலகில் நட்சத்திர வீரராக உருவெடுத்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று இரவு, மௌஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனது எஸ்யூவி வாகனத்தின் அருகில் நீரஜ் யாதவ் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என்று தகவல் தெரியவந்துள்ளது. வாழ்ந்து காட்டுதலே வீரம். தற்கொலை என்பது தவறான முடிவு. எந்த பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினால், தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம் அல்லது 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

neeraj yadav

கடந்த 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துப் பரிசோதனையில் நீரஜ் யாதவுக்கு எதிரான முடிவுகள் கிடைத்துள்ளது. இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு அவர் போட்டிகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊக்கமருந்து விவகாரம் தொடர்பான தடையால், இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாமல் போனதாகவும், இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாகவே அவர் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் நீரஜ் யாதவின் மரணம் தற்கொலையா என்பதும் அதற்கான உண்மையான காரணம், விசாரணை முடிவுகள் வெளியாகும்போதுதான் தெரியவரும்.