இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், ரஷ்யா-சவுதி அரேபியா இடையேயான கச்சா எண்ணெய் போர் ஆகியவை உலக அளவில் பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு தள்ளியுள்ளன. அந்த வகையில் இந்தியப் பங்குச் சந்தைகளும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளும் கடும் சரிவைக் கண்டுள்ளன. நேற்றைய தினம் மட்டும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது.
முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குகளை சவுதி ஆரோம்கோ நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்திருந்தது. அந்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த கடும் சரிவு நிச்சயமாக அந்த திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்திருந்தாலும், ஜியோ நிறுவனத்திற்கான முதலீடு 5000 கோடி டாலர் கடன் மூலம் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
2009-ஆம் ஆண்டுக்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்த இந்தப் மிகப் பெரிய சரிவால் முகேஷ் அம்பானி தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த கடும் சரிவு மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்தை 2021-ஆம் ஆண்டிற்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற நினைத்த முகேஷ் அம்பானியின் கனவு கலைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் 2018-ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சீன தொழிலதிபதிரான ஜாக் மாவின் நிகர சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலர் ஆகும். இது அம்பானியின் சொத்து மதிப்பை விட 2.6 பில்லியன் டாலர் அதிகம். அலிபாபா குரூப் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவும் தற்போதைய உலக பொருளாதார மந்த நிலையில் பாதிப்பை சந்தித்துள்ளார். இருப்பினும் அலிபாபா நிறுவனத்தின் குழும நிறுவனங்களான கிளவுட் கம்யூட்டிங் சேவை, மொபைல் ஆப் மூலமாக இந்தச் சரிவு ஈடுகட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கூறும்போது, இந்த பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமாகவே அம்பானியை பாதித்திருப்பதாகவும் விரையில் அவர் மீண்டு வருவார் எனவும் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் அம்பானியின் எண்ணெய் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்திருந்தாலும், அவர் தொடங்கிய ஜியோ நிறுவனத்தின் பங்குகள் நடப்பு ஆண்டு முதல் எதிரொலிக்கும் என்றும் கூறுகின்றனர்.