இந்தியா

சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு!

சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு!

webteam

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து பேசி வந்த சாமியாரின் ஆசிரமம் சூறையாடப்பட்டது. கார்களுக்கு தீ வைக்கப்பட்டன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரத்தில், கேரளாவில் பெரும் பதற்றம் நீடித்தது.

இந் நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பலர் பேசி வருகின்றனர். அதில் ஒருவர் சுவாமி சந்தீபானந்தா கிரி. இவரது ஆசிரமம் திருவனந்த புரத்தில் இருக்கிறது. இந்த ஆசிரமம் இன்று அதிகாலை மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. வளாகத்தில் நின்ற இரண்டு கார்களை தீயிட்டு எரித்தனர்.

ஒரு ஸ்கூட்டருக்கும் தீ வைத்து எரித்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அடையாளம் தெரியாத அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

தாக்குதல் நடைபெற்ற ஆசிரமத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் காலையில் சென்று பார்வையிட்டார். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ’சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது, இதுபோன்ற வன்முறைகள் அரங்கேறுகின்றன. மகாத்மா காந்தியை கொன்றவர்களைக் கொண்ட கும்பல்களால் இந்த வன்முறைகள் நடக்கின்றன.

சங்க் பரிவார் அமைப்புகள், இந்த தாக்குதலின் மூலம் சந்தீபானந்தாவை வெளியேற்ற முயற்சிக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்களை கண்டு அவர் அச்சப்படாமல், தனது செயல்பாடுகளைத் தொடர வேண்டும். சட்டம் ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள யாரையும் அனுமதிக்க மாட்டோம்.

சுவாமியின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாதவர்கள், அவரது ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர். அவரை உயிரோடு எரித்துக்கொல்லவும் முயற்சி நடந்துள்ளது’ என்றார். 

தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்ரமத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.