ஆஷிஷ் பானர்ஜி Fb
இந்தியா

முன்னாள் துணை சபாநாயகர் மர** .. TMC அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்.. மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள TMC கட்சி அலுவலகத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Premkumar S

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பலத்த தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான தாக்குதல்கள், அரசியல் வன்முறை சம்பவங்கள் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தச்சூழலில் தான், ராம்பூர்ஹாட் (Rampurhat) தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான ஆஷிஷ் பானர்ஜி, சுதந்திர தினமான நேற்று உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து, அவர் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான், இன்று காலை (ஆகஸ்ட் 16) அவர் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஷிஷ் பானர்ஜி

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எனக் கூறப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், தான் எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும், அரசியலில் ஈடுபட்டது குறித்து வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணி குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

74 வயதான ஆஷிஷ் பானர்ஜி, ராம்பூர்ஹாட் தொகுதியில் நீண்ட காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். 2001ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்த அவர், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வேளாண்மை மற்றும் பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னர் மேற்கு வங்க சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

மம்தா பானர்ஜி

கடந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் ராம்பூர்ஹாட் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வி அடைந்தநிலையில், தற்போது அந்த தொகுதியில் பாஜக-வை சேர்ந்த த்ரூபா சாஹா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். அதேபோல, திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் நிலவிவரும் நிலையிலும், மம்தா பானர்ஜி தரப்பிற்கே ஆதரவளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், கட்சி அலுவலகத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.