ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக, தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது, பாகிஸ்தான் நாட்டுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதுதொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ. அவர், “சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும். ஆகையால், எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும் அல்லது இந்தியர்களின் ரத்தம் ஓடும்” என மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.
இந்த நிலையில் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி மிகக் கடுமையாய்ப் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், "இதுபோன்ற குழந்தைத்தனமான பேச்சை மறந்துவிடுங்கள். அவருடைய தாத்தாவுக்கு என்ன ஆனது என்று அவருக்குத் தெரியாது? அவருடைய அம்மா பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். எனவே குறைந்தபட்சம், அவர் இப்படிப் பேசக்கூடாது. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தன் தாயைக் கொன்றது யார் என்று அவர் நினைக்க வேண்டும். பயங்கரவாதம்தான் அவரைக் கொன்றது. அவருக்கு அது புரியவில்லை என்றால், நீங்கள் எதைச் சொல்லி அவருக்கு விளக்குவீர்கள்? உன் தாய் சுடப்பட்டது பயங்கரவாதத்தால். நம் தாய்மார்களையும் மகள்களையும் கொல்லுவதும், பயங்கரவாதம் அல்லவா?
ஒரு நாட்டிற்குள் நுழைந்து அப்பாவிகளைக் கொன்றால், எந்த நாடும் அமைதியாக இருக்காது. மதத்தைக் கேட்டுவிட்டு, மக்களைக் கொல்லும்போது மதத்தைப் பற்றி எப்படிப் பேசுவீர்கள்? நீங்கள் கவாரிஜை விட (ஒரு இஸ்லாமியப் பிரிவு வழிதவறிச் செல்லும்) மோசமானவர். நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள். நீங்கள் அரை மணி நேரம் பின்தங்கியிருக்கவில்லை, இந்தியாவைவிட அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கிறீர்கள். பாகிஸ்தான் நாட்டின் மொத்த பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டுக்குக்கூட சமமாக இல்லை. அமெரிக்கா உங்களுக்கு ஏதாவது கொடுக்காவிட்டால், நீங்கள் நாட்டை நடத்த முடியாது” எனப் பேசியுள்ளார்.