இந்தியா

கர்நாடக அணைகள் திறப்பு: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,804 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள் திறப்பு: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,804 கன அடியாக அதிகரிப்பு

JustinDurai

தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் திறக்கப்பட்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12 ஆயிரத்து 804 கன அடியாக அதிகரித்துள்ளது.

குறுவை பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் கேரளா - கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை தொடர்கிறது. இதனால் கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 16-ஆம் தேதியிலிருந்து முதல்கட்டமாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவின் தலக்காடு, சாம்ராஜ்நகர், பாராசுக்கி அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு தமிழ்நாட்டை நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 0.74 அடி உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.61 அடியாகும். நீர் இருப்பு 34.98 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 804 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.