ஒவ்வொரு துளி மழை நீரையும் சேமிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதை பிரதமர் மோடி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஓராண்டில் பெய்யும் மழையில் 8 சதவிகித தண்ணீர் மட்டுமே சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் நீர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கூட்டு முயற்சியால் சரி செய்யவே ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என கிராமத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோடி, தண்ணீர் பிரச்னையை சமாளிக்க வேலூரை சேர்ந்த பெண்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டினார். நீரைச் சேமிக்க கடைபிடித்து வந்த பழங்கால நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்றும் நீரை சேமிக்கும் பல்வேறு நடைமுறைகள் கோயில்கள் உள்ளிட்ட புராதன இடங்களில் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
தண்ணீரை சேகரிப்பது குறித்து janshakthi4jalshakthi என்ற ஹேஷ்டேக் மூலம் மக்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இதனால் மக்கள் பலனடைவார்கள் என்றும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பொதுநல அமைப்புகள் மற்றும் பிரபலங்கள் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.