இந்தியா

மியன்மார் மாஃபியா கும்பலின் பிடியில் தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவிப்பு!

webteam

தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு மாஃபியா கும்பல்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் அவர்களை மீட்க தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி பின்னர் அவர்களை மாஃபியா கும்பல் மியான்மர் நாட்டுக்கு கடத்துகின்றன என்பதால் இந்த இரு நாட்டு அரசுகளின் துணையோடு இவர்களை மீட்க தொடர் முயற்சி நடைபெறுவதாக வெளிவரவுத்துறை அதிகாரிகள் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

மியன்மார் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க கோரிக்கை வந்தபோதுதான், தாய்லாந்து எல்லை வழியாக ஆள் கடத்தல் நடப்பது குறித்த தகவல்கள் தெரிய வந்தன. பேங்காக்  மற்றும் யாங்கூன் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்த விவரங்களை சேகரித்து மியான்மார் அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

மியான்மார் நாட்டில் உள்ள மியாவாடி என்கிற எல்லைப் பகுதியில் கடத்தப்பட்ட இந்தியர்கள் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என தெரியவந்தது. இந்த தொலைதூரப் பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலை மியான்மார் அரசின் முழு கட்டுப்பாட்டில் இல்லை. ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தாய்லாந்து எல்லை மூலம் ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆகவே மிகவும் கவனமாக அந்தப் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் மூலம் இதுவரை 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மியன்மார் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தவோ அல்லது கடத்தப்பட்டவர்களை மீட்கவோ நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் அளிக்க சூழல் இல்லாத நிலையில்,  வெளியுறவுத்துறை வட்டாரங்கள் புதிய தலைமுறைக்கு இந்த தகவல்களை அளித்தன. வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா பயணம் சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பிய பிறகு அமைச்சர் அளவில் கடத்தப்பட்ட தமிழர்கள் குறித்த தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது

இரண்டு மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மியன்மாரில் நடக்கும் ஆள்கடத்தல் விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஜூலை 5ஆம் தேதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் தாய்லாந்து நாட்டில் ஐடி துறையில் வேலை என விளம்பரம் அளித்து பின்னர் மியன்மார் நாட்டுக்கு பலர் கடத்தப்படுவது குறித்து அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அந்த அறிவுரையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டவர்களை மீட்பதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் கூறுகின்றனர் வெளியுறவுத்துறை அதிகாரிகள். தாய்லாந்து நாடு செல்லும்போது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகிய உரிய ஆவணங்களுடன் செல்லும் இவர்கள் மியான்மார் நாட்டுக்குள் நுழைய உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், அவர்கள் மியன்மார் நாட்டில் உள்ளது சட்ட விரோதமாக கருதப்படும். ஆகவே இந்திய தூதரக அதிகாரிகள் கடத்தப்பட்ட இந்தியர்கள் தாமாக அங்கே செல்லவில்லை என்றும் வலுக்கட்டாயமாக கடத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மியன்மார் நாட்டு அதிகாரிகளுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல இவர்கள் கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால்,  தாய்லாந்து நாட்டு எல்லையை விதிமுறைகளை பின்பற்றாமல் கடந்து மியன்மார் எல்லைக்குள் நுழைவது தொடர்பாகவும் தாய்லாந்து நாட்டு அதிகாரிகளுக்கு விளக்கப்படுகிறது. அதிகாரிகள் உரிய முறையில் புகார் அளித்து இந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வதாக வெளிவரவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் நாட்களில் இதற்கான முயற்சிகள் மேலும் தீவிரபடுத்தப்படும் என அவர்கள் வலியுறுத்தினர்.

- கணபதி சுப்ரமணியம்

இதையும் படிக்க: தூத்துக்குடி: காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது.!