இந்தியா

காற்று மாசு: விழிப்புணர்வுக்காக சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்த கோயில் நிர்வாகம்!

காற்று மாசு: விழிப்புணர்வுக்காக சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்த கோயில் நிர்வாகம்!

webteam

காற்று மாசு பாதிக்கும் என்பதால் வாரணாசியில் உள்ள கோயிலில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

வட மாநிலங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளது. டெல்லியில் சுவாசிக்கும் தரத்தை காற்று இழந்துவிட்டது. மற்ற மாநிலங்களிலும் காற்று மாசு நிலவியே வருகிறது. தீபாவளி பண்டிகை, ஹரியானா விவசாயிகள் ஏற்படுத்திய புகை எல்லாம் இணைந்து காற்று மாசை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. காற்று மாசினால் பாதிக்கப்படாமல் இருக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து நடமாடி வருகின்றனர். 

இந்நிலையில் காற்று மாசினால் பாதிக்கப்படாமல் இருக்க, வாரணாசியில் உள்ள ஒரு கோயிலில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது. வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள கோயிலிலும் சிவன், அம்மன், சாய் பாபா ஆகிய சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய உள்ளூர்க்காரர் ஒருவர், குளிர்காலங்களில் சாமி சிலைகள் போர்வையால் போர்த்தப்படும் வழக்கம் உள்ளது. அது போல தற்போது முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோயில் நிர்வாகி ஒருவர், நிறைய பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். சிலைகளுக்கு முகக்கவசம் அணிந்திருப்பதை பார்த்து அவர்களும் முகக்கவசம் அணிகிறார்கள். இதன் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என தெரிவித்தார்.