இந்தியா

மந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்

webteam

இந்திய பொருளாதாரம் ஐசியு-வை நோக்கி செல்வதாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி கடந்த இரண்டு காலாண்டுகளாக குறைந்துள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இந்தப் பொருளாதார நிலையை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து வந்தார். மேலும் இந்திய பொருளாதாரம் தொடர்பாக வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், பொருளாதார நிலை குறித்து முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார். அதில், “இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மந்தநிலை சாதாரணமானது அல்ல. இது ஒரு மிகப் பெரிய மந்தநிலை. இதனால் இந்திய பொருளாதாரம் தற்போது ஐசியுவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகமான வட்டி மற்றும் குறைந்த அளவில் கடன்கள் கிடைப்பதால் அதன் வளர்ச்சி தற்போது குறைந்துள்ளன.

இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5 சதவிகிதமானதால் இந்த நிலை ஏற்படவில்லை. அத்துடன் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் உற்பத்தியும் மிகவும் குறைவு மற்றும் முதலீடுகளின் குறைவும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேசமயம் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அரசின் வருமானம் ஆகிய அனைத்தும் குறைந்துள்ளது மிகவும் கவலையான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காரணிகளின் குறைவினால் இந்தியா பொருளாதாரம் 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட பிஓபி கிரைசிஸ் நிலைக்கு அருகில் சென்று கொண்டிருப்பதை அரிய முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.