டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார். அவருடன் ஆறு அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் கெஜ்ரிவாலின் கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா மற்றும் பிற அமைச்சர்களான சத்தேந்திர ஜெய்ன், கோபால் ராய், கைலாஷ் கேலாட், இம்ரான் ஹுசைன் மற்றும் ராஜேந்திர கவுதம் ஆகியோரும் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர். இதனையொட்டி 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. டெல்லி காவல்துறையினர், துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ட்ரோன் கேமராக்களும் கண்காணிப்புப் பணிக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றன. ராம்லீலா மைதானம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பதவியேற்பு விழாவில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகவும் இச்செயலை கண்டிப்பதாகவும் கெஜ்ரிவாலுக்கு பாஜக எம்எல்ஏ விஜேந்தர் குப்தா கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 பணியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். மொகல்லா மருத்துவமனை மருத்துவர், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி, இரவுநேர காப்பக நிர்வாகி, சிக்னேச்சர் பாலத்தை வடிவமைத்த பொறியாளர், மெட்ரோ ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட 50 பேர் சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும், டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிற மாநில அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை நாளன்று கெஜ்ரிவால் போன்ற தோற்றத்தில், சமூக வலைத்தளங்களில் வைரலான ஆவ்யன் டொமார் என்ற குழந்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக ஆம் ஆத்மி ஏற்கெனவே தெரிவித்துள்ளது