டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 1 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை காவல்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் மத்திய அரசின் கைவசம் உள்ளது. தங்களிடம் உள்ள அதிகாரங்கள் மூலம் டெல்லி அரசை மத்திய அரசு கட்டுப்படுத்தவே முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டார். அதேபோல் மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தப் போராட்ட அறிவிப்பு மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் என்றும், இந்தப் போராட்டங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சிக்கலாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தலைநகர் டெல்லியில் போராட்டம் என்பதால் இது இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்றும் கெஜ்ரிவாலின் போராட்டத்தை பிரதமர் மோடி எப்படி கையாளப்போகிறார் என்பதுமே அடுத்தக்கட்ட முக்கிய அரசியல் நகர்வாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.