ஸ்வாதி மாலிவால் எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி | ஆம் ஆத்மி தோல்வி.. திரௌபதியின் துகில் உரிக்கும் படத்தைப் பகிர்ந்த ஸ்வாதி மாலிவால்!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததையடுத்து, திரௌபதியின் துகில் உரிக்கும் படத்தை அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் பகிர்ந்துள்ளார்.

Prakash J

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதன்படி, பாஜக ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்களைத் தாண்டி அபார வெற்றிபெற்றுள்ளது. அது 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.

ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸுடன் கூட்டணி இல்லாதது, புதிய மதுபானக் கொள்கை ஊழல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆடம்பர பங்களா, வடகிழக்கு டெல்லி கலவரம், அடிப்படை வசதிகள் செய்யாதது, யமுனை நீர் பற்றிய பேச்சு உள்ளிட்டவை காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மியின் தோல்வி குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். அவர் தனது வலைதள பக்கத்தில், மகாபாரத கதையில் கெளரவர்கள் திரௌபதியை துகில் உரிக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்த ஸ்வாதி மாலிவால், ”நீர், காற்று மாசுபாடு மற்றும் தெருக்களின் நிலை போன்ற பிரச்னைகளால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இழந்தார். மக்கள் சொல்வதைச் செய்ய வேண்டும். ஆனால் ஆம் ஆத்மி தலைமை அதை மறந்துவிட்டு, அவர்கள் முன்பு சொன்னதுக்கு மாறாக செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்வாதி மாலிவால்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்குத் தாம் சென்றிருந்ததாகவும், அப்போது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த தனி உதவியாளரான பிபவ் குமார் தன்னை தாக்கியதாகவும் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்திருந்தது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி தேர்தலுக்கு முன்னதாக, யமுனை நதியை சுத்தம் செய்ய அரசாங்கம் தவறியது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கெஜ்ரிவால் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.