மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட I.N.D.I.A. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பலவும் அங்கம் வகித்துள்ளன. அந்த வகையில், மக்களவைக்குப் பிறகும் ஒருசில மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அந்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு வருகிறது. அதேநேரத்தில், இன்னும் ஒருசில இடங்களில் காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறது. அந்த வகையில், தலைநகர் டெல்லியில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, காங்கிரஸை இப்போதே ஆம் ஆத்மி கழற்றிவிட்டுள்ளது. I.N.D.I.A. கூட்டணியில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதையடுத்தே அக்கட்சி இப்போதே தேர்தல் பணியில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையே, மக்களவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டன. இதனால் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி இணைந்து டெல்லியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணையாமல் தனித்துப் போட்டியிட உள்ளது. ஆம் ஆத்மியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடாது. தனித்தே போட்டியிட உள்ளது” எனத் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் 7 தொகுதிகளிலும் i-n-d-i-a கூட்டணி தோல்வியைத் தழுவியது. இது ஒரு பாடமாக அமைந்ததையடுத்து, காங்கிரஸை ஒதுக்கிவிடுவதில் ஆம் ஆத்மி முக்கிய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. ஆனால், காங்கிரஸுக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை. இதையும் ஆம் ஆத்மி மனதில் வைத்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சதவிகிதம் குறைந்து வருவதை அதில் கருத்து கொண்டே இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வரும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட உள்ளது.
ஆம் ஆத்மி, இப்படி காங்கிரஸைக் கழற்றிவிடுவது இது முதல் முறையல்ல. மக்களவைத் தேர்தலின்போது, பஞ்சாப்பில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு அந்தக் கட்சி தனித்தே களம் கண்டது. ஹரியானா சட்டமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. அதுபோல் மேற்கு வங்கத்தின் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும் கழற்றிவிட்டிருந்தது. காங்கிரஸும், கேரளாவில் கம்யூனிஸ்ட்டை கழற்றி விட்டுவிட்டு, தனித்தே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.