பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளின் மீது கடுமையான தாக்குதலை முன்வைத்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளார். அமித் ஷாவிற்கு அவர் எழுதிய கடிதத்தில், பல பள்ளிகள் மற்றும் ஐஜிஐ விமான நிலையத்திற்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை மேற்கோள் காட்டி, இந்த நகரம் நாட்டின் "குற்றத் தலைநகரம்" என்று அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 2025ல் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது கெஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பேசுபொருளாகியுள்ளது. அதில் "உங்கள் கண்காணிப்பின் கீழ், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நமது தலைநகரை வன்கொடுமை தலைநகர், குண்டர்களின் தலைநகர், போதைப் பொருள் தலைநகர் என்று அழைப்பது மிகவும் வெட்கக்கேடானது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் எல்லா இடங்களிலும் செயல்படுகின்றன, போதைப்பொருள் மாஃபியா நகரம் முழுவதும் பரவி வருகிறது, மொபைல் போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில், 600க்கும் மேற்பட்ட பள்ளிகள், 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது, மேலும், “குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் டெல்லியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். பள்ளிகள் காலியாகி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் போது குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா என்றும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியின் சட்டம் ஒழுங்குமிகவும் மோசமாக இருப்பதாகவும், நிலைமையை உடனடியாக சரிசெய்ய விரைந்து செயல்பட்டு அமித்ஷா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொலைகளில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் 350 சதவிகிதம் அதிகரித்துள்ளன, ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள், அதேபோல வணிகர்கள் தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகளைப் பெறுகிறார்கள் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
“இந்தப் புள்ளி விவரங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்குச் சான்றாகும்,” என்ற அவர் தான் தொடர்ந்து மக்களிடையே சென்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு குறித்து அமக்களிடையே ஆழ்ந்த வருத்தம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "இப்போது மக்களின் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், அவர்கள் தேசிய தலைநகரில் ஒரு சிறந்த சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைக்கு தகுதி பெறவில்லையா?" அவர் கூறினார். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.