பிட்காயின் போன்ற இணையதள வழி நாணயங்களை பயன்படுத்துவோருக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “பிட்காயின் போன்ற இணையதள வழி பணத்தைப் பலர் பயன்படுத்தி வரும் நிலையில் அது பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் உள்ளன. இது போன்றவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா? இவ்விவகாரத்தில் அரசு என்ன செய்யப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அருண் ஜேட்லி, “பிட்காயின் போன்ற இணையதள வழி பணம் சட்டப்படி செல்லாது. எனவே இவற்றுக்கு சட்டப்படியான பாதுகாப்பும் இல்லை. இதுபோன்ற பணத்தின் பயன்பாடு பரவலாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தை எவ்வாறு கையாள வேண்டும் என நிபுணர் குழுவின் அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது. அது தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். 2013 ஆம் ஆண்டிலிருந்தே இவ்விவகாரத்தில் அரசும் ரிசர்வ் வங்கியும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றன” என்று பதிலளித்தார்.