வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் என பிரதமர் மோடியை அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லியின் உடல் கடந்த வாரம் மோசமடைந்த நிலையில், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று நண்பகல் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
அருண் ஜெட்லியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளிநாடு சென்றுள்ள நிலையில் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஆறுதல் தெரிவித்தார். அப்போது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்ப வேண்டாம் என பிரதமர் மோடியிடம் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்சில் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட பின் இந்தியா திரும்புவார் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.