புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் படத்தை டிரெட்மில்லில் நடந்த படியே ஹைதராபாத்தை சேர்ந்த ஓவியர் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓவியர் சமுதராலா ஹர்ஷா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் படத்தை டிரெமில்லில் நடந்தபடியே வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் படத்தை டிரெட்மில்லில் நடந்த படியே வரைந்துள்ளேன். இதை நான் 45 நிமிடங்கள் டிரெட்மில்லில் நடந்தபடியே வரைந்து முடித்துள்ளேன். இதன் மூலம் என் பெயர் இந்தியன் புக் ஆஃப் ரேகார்டு, லிம்கா ரேகார்டு மற்றும் கின்னஸ் சாதனை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நான் பிரபலமானவர்களை வரையும் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றேன். 2012ஆம் ஆண்டு 24 மணி நேரம் இடைவிடாமல் 507 படங்கள் வரைந்தது கின்னஸ் சாதனை புத்தகம் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரேகார்ட் ஆகியவற்றில் முதல் முறையாக இடம்பெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் துபாயின் தேசிய தினத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது அங்கு ஹர்ஷா, துபாய் நாட்டு மன்னரின் படத்தை வரைந்தார். இதற்காக அவருக்கு ஒரு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இந்தச் சாதனைகளை தொடர்ந்து தற்போது ஹர்ஷா அமெரிக்க அதிபர்கள் 45 பேரின் படங்களை வரையும் முயற்சியில் 2020ஆம் ஆண்டு லண்டனில் ஈடுபட உள்ளார். அத்துடன் இவர் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஒரு நிமிடத்திற்குள் வரைய உள்ளது குறிப்பிடத்தக்கது.