சட்டப்பிரிவு 370
சட்டப்பிரிவு 370 புதியதலைமுறை
இந்தியா

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகொடுத்த 370வது பிரிவை நீக்கியது செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

யுவபுருஷ்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் எஸ்.கே. கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட, நீதிபதிகள் இன்று தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு தீர்ப்பும் மற்ற நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர். அதன்படி, “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றுதான் ஜம்மு காஷ்மீர். சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா எனது குறித்து ஆராயப்படும்.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது செல்லுபடியாகுமா? என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை. அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும். சிறப்பு அந்தஸ்து கொடுத்த 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.