நசீமா ANI, PTI
இந்தியா

350 கிலோ வெடிபொருட்கள் | கைதான மருத்துவர்.. மகனின் நடத்தை குறித்து தாயார் சொன்ன முக்கிய தகவல்!

ஃபரிதாபாத்தில் பயங்கரவாத அமைப்பை நடத்தியதாகக் கூறப்படும் தன் மகனின் (ஷகீல்) நடவடிக்கைகள் குறித்து அவரது தாயார் நசீமா கருத்து தெரிவித்துள்ளார்.

Prakash J

ஃபரிதாபாத்தில் பயங்கரவாத அமைப்பை நடத்தியதாகக் கூறப்படும் தன் மகனின் (ஷகீல்) நடவடிக்கைகள் குறித்து அவரது தாயார் நசீமா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக டாக்டர் ஆதில் அகமது என்பவரை ஜம்மு-காஷ்மீர் காவல் துறை கைதுசெய்தது. ஆதில் அகமதிடம் நடத்திய விசாரணையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஒரு விடுதியில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு, ஆதிலின் கூட்டாளியான மருத்துவர் ஷகீல் அகமது பிடிபட்டார். அங்கு, பல பெட்டிகள் மற்றும் பக்கெட்டுகளில் பதுக்கப்பட்டிருந்த 350 கிலோகிராம் அம்மோனியம் நைட்ரேட் ரக வெடிபொருட்கள், இரண்டு AK-47 ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் டைமர் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, மருத்துவர் ஷகீல் அகமதுவும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, நேற்று மாலை 6.52 மணியளவில் டெல்லி செங்கோட்டை சிக்னல் அருகே கார் ஒன்று வெடித்தது. இதில் சுற்றியிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.

jk doctor arrest

இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கார் விபத்திற்கும் ஃபரிதாபாத்தில் வெடிமருந்துகளை பறிமுதல் செய்த மருத்துவருக்கும் தொடர்பிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஃபரிதாபாத்தில் பயங்கரவாத அமைப்பை நடத்தியதாகக் கூறப்படும் தன் மகனின் (ஷகீல்) நடவடிக்கைகள் குறித்து அவரது தாயார் நசீமா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ANI நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “ஷகீல், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் டெல்லியில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். அந்த நேரத்தில் அவரைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டபிறகே, ​​மற்றவர்களிடமிருந்து அதைப் பற்றி தெரிந்துகொண்டோம். நாங்கள் அவரைச் சந்திக்க முயற்சித்தோம், ஆனால் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. எனது மற்றொரு மகன்கூட கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பில், என் மகன் சந்தேக நபர் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் இரண்டு மகன்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஷகில் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்களது குடும்பத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது சகோதரர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அவர், “எங்கள் தந்தையின் அறுவைசிகிச்சையின்போது ஜூன் மாதம் அவர் கடைசியாக எங்களைப் பார்க்க வந்தார். எல்லோரும் அவரை, ஒரு பயங்கரவாதி என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் எங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 50 ஆண்டுகளில் எங்கள் குடும்பத்தின்மீது ஒரு வழக்குகூட இல்லை. நாங்கள் மனதார இந்தியர்கள். இந்தியாவுக்காக கல்வீச்சுக்கு ஆளானோம். அவர், ஒரு நல்ல மனிதர். அவர்கள், எங்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. அவர் கலந்து கொள்ளவிருந்த என் சகோதரியின் திருமணம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.