இந்தியா

”வாழ முடியாமல் பிரிகிறோம்” - வீடியோ வெளியிட்டு மனைவியை சுட்டுக்கொன்ற தொழிலதிபர் தற்கொலை!

JustinDurai

மத்தியப் பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா நகரின் நகரின் மையப்பகுதியில் உள்ள கிஷோர் கஞ்ச் பகுதியில் ஜவுளி தொழிலதிபரான சஞ்சய் சேத் என்பவர் தனது மனைவி மீனுவுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஞ்சய் சேத் மற்றும் மீனு ஆகிய இருவரும் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் இருந்தனர்.

அப்போது திடீரென்று அவர்களது வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிச்சென்று அங்கு பார்த்துள்ளனர். வீட்டில் மீனு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க, சஞ்சய் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் சஞ்சய் சேத்தின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகேஷ்வர் தாமின் தீவிர பக்தரான சஞ்சய் சேத், அக்கடிதத்தில் "குருஜி, என்னை மன்னியுங்கள். எனக்கு இன்னொரு பிறவி கிடைத்தால், உங்களின் தீவிர பக்தனாக பிறக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இறப்பதற்கு முன் சஞ்சய் சேத் தனது செல்போனில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அழுதபடியே பேசும் சஞ்சய் சேத், தன்னிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராதவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் "எனது பிள்ளைகளுக்காகவும், என் மகளின் திருமணத்திற்காகவும் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விடுங்கள். மகளின் திருமணத்தை ரூ.50 லட்சம் முதல் 1 கோடி செலவில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.

என் மகளின் வங்கிக்கணக்கில் ரூ.29 லட்சம் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. நானும் என் மனைவியும் வாழ முடியாமல் பிரிந்து செல்கிறோம். மகளுக்கு நிறைய நகைகள் உள்ளன. என் பிள்ளைகளே என்னை மன்னியுங்கள்" என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பன்னா காவல் கண்காணிப்பாளர் தரம்ராஜ் மீனா கூறுகையில், ''முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளது போல் தெரிகிறது. மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது மிகவும் சோகமான சம்பவம். வெளியாட்கள் யாரும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டது போல் தெரியவில்லை. அந்த வீட்டில் தம்பதிகள் தனியாக இருந்தனர். இருப்பினும் நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" என்றார்.