இந்தியா

“அர்னாப் கோஸ்வாமி எங்களை எப்படியெல்லாம் மிரட்டினார்” தற்கொலை செய்த வடிவமைப்பாளரின் மகள்

webteam

ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கைது நடவடிக்கையை , கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட கட்டட வடிமைப்பாளரின் குடும்பத்தினர் வரவேற்று உள்ளனர்.

அலிபாக் பகுதியைச் சேர்ந்த உள்கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தனது தாயார் குமுத் நாயக்குடன் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப், ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோர் தனக்குத் தரவேண்டிய 5.40 கோடி ரூபாயை தராததே காரணம் என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அர்னாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் டி ஆர்.பி ரேட்டிங் தொடர்பான வழக்குகளையும் முன்வைத்து மும்பை காவல்துறை அவரை இன்று காலை கைது செய்தது. கைதின் போது அவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு ஆதரவு குரல்களும் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகிறது. 

இந்நிலையில் அர்னாப் கைது நடவடிக்கையை அன்வய் நாயக்கின் மனைவி மற்றும் மகள் ஆகியோர்  வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக பேசிய அவரது மகள் கூறும் போது “ என் அப்பாவுக்கு தர வேண்டிய 83 லட்ச ரூபாயை அர்னாப் கோஸ்வாமி தரவில்லை. பணத்தை தொடர்ந்து கேட்ட போது என் தந்தை அர்னாபால் மிரட்டப்பட்டார். எங்களை பின்தொடர்ந்து யாராவது பைக்கில் வருவார்கள். எங்கள் தொலைபேசியை ஒட்டு கேட்பது.

வீட்டுக்குள் வந்து சிலர் உட்கார்ந்துகொண்டு மன உளைச்சல் ஏற்படுத்துவார்கள். என்னுடைய வேலை, தொழிலை ஒன்றுமில்லாமல் செய்து விடுவதாக மிரட்டினர். என் அப்பா தற்கொலை செய்யும் முன் அர்னாப் பெயரை எழுதி வைத்துவிட்டு இறந்தார். என் அப்பா உயிரிழப்புக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி நாங்கள் ஏறாத இடம் இல்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். "

"அர்னாப் கோஸ்வாமி கைதுக்காக இத்தனை நாள் காத்திருந்தோம். இந்த கைதை வரவேற்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும். என்று கூறினார்.