இந்தியா

டாக்டர்களுக்கு உதவித்தொகை வழங்க மறுத்த ராணுவ மருத்துவ கல்லூரி - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

webteam

மருத்துவர்களுக்கான இன்டர்ன்ஷிப் உதவித்தொகையை வழங்க மறுப்பதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

டெல்லியில் இயங்கும் ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியின் நிறுவனத்தில் ஏராளமான மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வருட கட்டாய இன்டெர்ன்ஷிப் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் போது, நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து அதனை தராமல் இருப்பதாக பயிற்சி மருத்துவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில், தேசிய மருத்துவ கமிஷனின் விதிமுறைகளின் படி உதவித்தொகையை வழங்குவதை மறுப்பது என்பது விதிமுறை மீறல் எனவும், மேலும் பணிபுரியக்கூடிய பயிற்சி மருத்துவர்கள் பெரும்பாலானோர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவே அவர்களுடைய உணவு இருப்பிடம் மற்றும் இதர தேவைகளுக்கு இந்த உதவி தொகை என்பது அவசியமாகின்றது. எனவே உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

வாதங்களை கேட்டபிறகு மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு ராணுவ மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.