பணியின் போது செல்போன் பயன்படுத்தியதை கேள்விகேட்ட ராணுவ மேஜரை, ராணுவ வீரர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் 8-வது ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் மேஜராக இருப்பவர் ஷிகார் தாபா. எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள புசாரில் ராணுவ வீரர்களை கண்காணித்தார். பணியில் இருக்கும்போது ராணுவ வீர்ர்கள் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று மேஜர் உத்தரவிட்டிருந்தார். நேற்று திடீரென ராணுவ வீரகளை சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது நாயக் கதிரேசன் என்பவர் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவரை தபா எச்சரித்தும் மீண்டும் அதே தவறை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மேஜருக்கும் நாயக்குக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில், ஏகே 47 துப்பாக்கியால் மேஜரை சுட்டார் கதிரேசன். இதில் படுகாயமடைந்த மேஜர் பின்னர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
நாயக் கதிரேசன் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனத் தெரிகிறது.