இந்தியா

காஷ்மீரில் ஊடுருவ முயற்சி : 2 பாக். வீரர்கள் சுட்டுக்கொலை

webteam

ஜம்மு காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் பகுதியில், பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்களை பெற்றுக்கொள்ளுமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

முன்னதாக நேற்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் ஹன்ஜன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வீரர்கள் விரைந்த நிலையில், அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். 

தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை ஆக்கிரமித்த பாதுகாப்பு படையினர், அங்கு சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.