குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் சிக்கிய முப்படை தலைவர் பிபின் ராவத்தின் இல்லத்திற்கு, ராணுவத் தளபதி நரவனே சென்று பிபின் ராவத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்திருக்கிறார். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கையும் ராணுவத்தளபதி நரவனே நேரடியாக சந்தித்துள்ளார். அப்போது ஹெலிகாப்டர் விபத்து குறித்த கூடுதல் தகவல்களை ராஜ்நாத் சிங்கிடம் நரவனே தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரியும் ராஜ்நாத் சிங்-ஐ சந்தித்திருந்தார். அவர் தற்போது நேரடியாக விபத்து நடந்த இடமான குன்னூருக்கு வந்துக்கொண்டிருக்கிறார்.
இதேநேரத்தில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசரமாக நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.30 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அந்தக் கூட்டத்தில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
நிலவிவரும் அவசர சூழ்நிலை காரணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவருக்கு மகாராஷ்ட்ராவில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. போலவே அவசர நிலை காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் குன்னூருக்கு சாலை மார்க்கமாக விரைந்திருக்கிறார்.