ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட பாகிஸ்தான் படைகளின் தாக்குதலும் ஒரு காரணம் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பிபின் ராவத் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாற்பாடு மட்டுமல்லாது பாகிஸ்தான் படைகளின் தாக்குதலும் காஷ்மீரில் பனிச்சரிவு ஏற்பட முக்கியமான காரணமாக இருப்பதாகவும் ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கையெறிகுண்டுகள், கனரக ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதால் பனிப்பாறைகள் தளர்ந்து பனிச்சரிவு ஏற்படுகிறது எனவும் அவர் கூறினார்.
காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஷ் ராணுவ முகாம் பகுதியில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.