cctv footage x
இந்தியா

பட்டப்பகலில் பயங்கரம்! துப்பாக்கி முனையில் திருட்டு! 40 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வந்த நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், துப்பாக்கி முனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

பீகாரின் பெட்டியா நகரில் உள்ள நகைக்கடையில், 8 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் 40 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது. வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் மிரட்டி, செல்போன்களை பறித்து தப்பியுள்ளனர். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் Senco Gold & Diamonds நகைக்கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த நகைக்கடை இயங்கிக்கொண்டிருந்த நிலையில், இன்று மூன்று இருசக்கர வாகனங்களில் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. முதலில் வாடிக்கையாளர்களைப் போலக் கடைக்குள் நுழைந்த அவர்கள், சிறிது நேரம் அங்கிருந்த சூழலைக் கவனித்துள்ளனர். பின்னர் திடீரென தங்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி ஊழியர்களையும், கடையில் இருந்த வாடிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளனர்.

senco gold & diamonds

இதனால் அங்கிருந்தவர்கள் செய்வதறியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர்ந்து, வாடிக்கையாளர்களை ஓரிடத்தில் அமர வைத்ததுடன், சிலரது கைகளையும் கட்டிப்போட்டுள்ளனர். மேலும், யாரும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் செல்போன்களையும் கொள்ளையர்கள் பறித்துள்ளனர். இதையடுத்து, கடையில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் மூட்டைகளில் அள்ளிச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தின்போது எதிர்ப்பு தெரிவித்த ஊழியர் ஒருவரைத் துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார். மேலும், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது, மீண்டும் வருவோம் என்றும் மிரட்டிச் சென்றதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்டத் தகவல்களின்படி, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 30 முதல் 40 கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக நகைக்கடைக்கு விரைந்துள்ளனர். நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கக்கூடிய வழிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

GOLD

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியமான வர்த்தகப் பகுதியில், முகமூடிகூட அணியாமல் கொள்ளையர்கள் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.