இந்தியா

தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

webteam

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையால், மார்க்கெட்டில் தக்காளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை ஏறினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உதாரணமாக, வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறியதால், அது ஆட்சியாளர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய் வரை விற்றுள்ளது. மத்திய அரசும் தக்காளி விலை குறைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மார்க்கெட்டில் தக்காளியை பாதுகாக்கும் விதத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் படையினரை மாநில அரசு நியமனம் செய்துள்ளது. இதைதொடர்ந்து, காவல் படையினர் மார்க்கெட்டில் உள்ள தக்காளி கடைகளின் முன்னர், கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதை காய்கறி வாங்க வருவோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஏற்கனவே, மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 700 கிலோ தக்காளியை மர்ம ஆசாமிகள் சிலர் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தக்காளி திருடர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.