இந்தியா

ஃபேஸ்புக்கில் லைவ்: மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மாணவர்

ஃபேஸ்புக்கில் லைவ்: மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மாணவர்

webteam

தேர்வுகளில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர், 19வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் பேஸ்புக் லைவில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

மும்பையில் இருக்கும் தனியார் கல்லூரியில், பி.காம் பயின்று வந்துள்ளார் அர்ஜுன் பரத்வாஜ். பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனான இவர், மும்பையில் இருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் நேற்று மாலை தங்கி இருந்தார். சில காலமாக, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த பரத்வாஜ், கடும் மனச் சோர்வுக்கு ஆளாகி இருந்தாராம். இதனால், நேற்று மாலை 6.30 மணி அளவில், ஃபேஸ்புக் லைவின் மூலம் தற்கொலை செய்வது எப்படி என்று பேசிவிட்டு, ஓட்டலின் 19-வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டல் நிர்வாகம், ‘பரத்வாஜ், அடிக்கடி உணவு ஆர்டர் செய்வார். மற்றபடி, எங்களுக்கு எந்தத் தொந்தரவும் தந்ததில்லை’ என்று கூறியுள்ளது.

தற்கொலை லைவ் வீடியோவை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று மும்பை போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மும்பை போலீஸ் தமது டிவிட்டர் பக்கத்தில், ‘நகரத்தில் நடக்கும் இளைஞர்களின் தற்கொலை, மிகுந்த வருத்தம் தருகிறது. இத்தகைய இளைஞர்கள், எங்கள் உதவியை நாடும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்று பதிவுசெய்துள்ளது. மேலும், பரத்வாஜ் கடும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், தேர்வுகளில் தொடர்ச்சியான தோல்வியால் மன உளைச்சலில் இப்படிச் செய்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.