இந்தியா

முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்

முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம்

Rasus

டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் அறிவிக்கப்படாத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரியும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரியும் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். கடந்த 11 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்த கெஜ்ரிவாலுடன் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர செயின் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் வீடு திரும்பிய நிலையில், கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம் இன்று மாலை வரை நீடித்தது. இந்நிலையில், துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளையடுத்து தனது தர்ணா போராட்டத்தை கெஜ்ரிவால் திரும்பப்பெற்றுள்ளார். தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த ஆளுநர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தனது 9 நாள் போராட்டத்தை திரும்பப்பெற்றுள்ளார்.