ramayana ANI
இந்தியா

ஒரே பாடலுக்கு 13 வெர்ஷன்களா? 12 பட வாய்ப்புகளை நிராகரித்த ரஹ்மான்! அப்படி என்ன ஸ்பெஷல்?

சுமார் 12 பட வாய்ப்புகளை நிராகரித்து, ஒரு திரைப்படத்திற்காகத்தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இசையமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள இவர், தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ராமாயணம் திரைப்படத்திற்கு, பிரபல ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், இதுவரை உலகளவில் சுமார் 1,700 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்காக ரஹ்மான் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வந்தார்.

AR RAHMAN

குறிப்பாக, ரஹ்மானின் மதத்தைக் குறிப்பிட்டு, இந்தப் படத்தின் இசையில் இஸ்லாமிய இசையின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற 56ஆவது International Film Festival of India (IFFI) திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ரஹ்மான், ராமாயணம் படத்தின் இசை உருவாக்கம் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.அப்போது பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக ராமாயணம் படத்தின் இசை மற்றும் பின்னணி இசைக்கான தீம்களை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்.

படத்தில் இடம்பெறும் சில பாடல்களுக்கு 12 முதல் 13 வெர்ஷன்கள் வரை உருவாக்கப்பட்டதாகவும், அதில் 'Ravana Tandav' பாடலைப் பொறுத்தவரை பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகுதான் அனைவருக்கும் பிடித்தமான இறுதி வடிவம் கிடைத்ததாகவும் கூறினார். இதற்கிடையே, இந்தப் படத்தின் இசைப் பணிகளில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்காகச் சுமார் 10 முதல் 12 திரைப்படங்களின் வாய்ப்புகளை நிராகரித்ததாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பல முக்கியமான பெரிய திரைப்பட இயக்குநர்களின் படங்களிலும் பணியாற்ற மறுத்ததாகக் கூறிய அவர், இந்த முடிவை எடுத்ததில் தனக்குப் பெருமை இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

AR RAHMAN

ஒரு படத்தின் இசை உருவாக்கத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மற்ற பட வாய்ப்புகளைத் தவிர்த்ததாகவும் கூறி இருக்கிறார். இவ்வாறு, ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தின் இசைக்காக மூன்று ஆண்டுகள் உழைத்து, சுமார் 10 முதல் 12 திரைப்பட வாய்ப்புகளையும் நிராகரித்திருப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.