மனைவிக்காக பரப்புரை செய்த இடத்தில் கடைக்காரர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நடிகர் அனுபம் கெர் தடுமாறினார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 5 கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டும் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சண்டிகர் தொகுதியில் நடிகர் அனுபம் கெரின் மனைவியான கிர்ரான் கெர் போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது அத்தொகுதியை மீண்டும் தக்க வைக்கும் நோக்கில் போட்டியிடும் அவருக்கு ஆதரவாக அவரது கணவர் அனுபம் கெர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சண்டிகரில் வீடு வீடாக அனுபம் கெர் பரப்புரை கொண்டுள்ளார். அப்போது பரப்புரைக்கு சென்ற இடத்தில் அங்கிருந்த கடைக்காரர் ஒருவர், கடந்த 2014-ஆம் ஆண்டின் பாஜக தேர்தல் அறிக்கையை அனுபம் கெர்ரிடம் காட்டினார். இந்தத் தேர்தல் அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் எத்தனை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறிய அனுபம் கெர், கடைக்காரருக்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.