தெலங்கானா மாநிலத்தில் பல ஆண்டுகளாக குப்பைகளால் மூடப்பட்டிருந்த பழமையான படிக்கிணறு தூய்மைப்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நகரமான செகந்திராபாத்தில் பன்சிலால் பேட்டை பகுதியில் உள்ள புகழ்பெற்ற நல்லா போச்சம்மா கோயிலின் அருகே 53 அடி ஆழமுள்ள படிக்கிணறு அமைந்துள்ளது. நிலத்தை அகழ்ந்து அமைக்கப்பட்ட தளங்கள், வேலைப்பாடுகள் மிக்க தூண்களைக் கொண்ட மண்டபங்கள், அங்கு செல்ல படிகள் என அந்தப் படிக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருமை தெரியாத மக்கள், குப்பைகளைக் கொட்டி வந்ததால் படிக்கிணறே மூடப்பட்டு மறைந்து போனது.
ஹைதராபாத்தின் தொன்மையை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், செகந்திராபாத் படிக்கிணறை மீட்க நடவடிக்கை எடுத்தது. இதில் தன்னார்வலர்களும் கரம் கோர்த்ததைத் தொடர்ந்து, படிக்கிணற்றில் கொட்டப்பட்டிருந்த 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போது அந்தப் படிக்கிணறு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.