இந்தியா

பேசுபொருளாகும் சீனப் பொருட்கள் புறக்கணிப்பு..என்னவாகும் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் மார்க்கெட்?

webteam

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்கள் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சீனா இந்தியா மீது சைபர் தாக்குதலையும் நடத்தியதாக சொல்லப்பட்டது.

இதனிடையே பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய அரசு 50-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது. மேலும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்களையும் வர்த்தகர்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் தாக்கம் டெல்லியின் முக்கிய எலக்ட்ரானிக் சந்தையில் பிரதிபலித்ததைத் தொடர்ந்து சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட் எலக்ட்ரானிக் சந்தையிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தை ரிச்சி ஸ்ட்ரீட்டில் உள்ளது. சந்தையில் மொத்தம் 1500 கடைகள் உள்ளன. அதில் 8000 நபர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள கடை உரிமையாளர்கள்  சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வர்த்தகர் ஒருவர் கூறும் போது “கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி முதல் கடைகளை மூடியிருக்கிறோம். கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட இருக்கிறது. சந்தை இயங்கும் போதும், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க வரும்போதுதான் உணமையான நிலவரம் தெரிய வரும்” என்றார்.

இது குறித்து ரிச் சந்தையின் செயலாளர் கூறும்போது “ டெல்லியில் சீன எலக்ட்ரானிக் பொருட்களுக்கான புறக்கணிப்பு என்பது தொடங்கி விட்டது. தற்போது அது தெற்கு பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் அதிக பணம் கொடுத்து இந்தியாவில் உருவாக்கப்படும் பொருட்களை வாங்கத் தயாராகி விட்டனர். அதனால் சீனப் பொருட்கள் புறக்கணிப்பு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தாது." என்றார். 


இது குறித்து அகில இந்திய மின்னணுவியல் சங்கத்தை சேர்ந்த முகேஷ் குப்சந்தனி கூறும் போது “ தற்போது சீனாவில் இருந்து வரும் எலக்ட்ரானிக் பொருட்களை, இந்தியாவில் உள்ள எலக்ட்ரானிக் வர்த்தகர்கள் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையான நிலவரத்தைத் தெரிந்து கொள்ள மேலும் ஒரு மாத காலம் தேவைப்படும். நான் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சீனா சென்று வருபவன். என்னுடைய அனுபவத்தின்படி அரசுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அது என்னவென்றால் இந்தியாவிலேயே அரசு தொழில்துறை நகரங்களை அமைத்து, இங்குள்ள வர்த்தகர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும். அதே போல வர்த்தகர்கள் எதிர்கொண்டிருக்கும் இந்தச் சவாலை சமாளிப்பதற்கும் அரசு உதவ வேண்டும்” என்றார்

இதில் மற்றொரு கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பொருட்களின் விலை உயர்வு. இது குறித்து டெல்லி வர்த்தகர் ஒருவர் கூறும் போது “சீனப் பொருட்களின் தட்டுப்பாட்டால் தற்போது அதன் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது தற்காலிகமானதுதான். சீன பொருட்கள் இந்தியாவிற்கு வர ஆரம்பித்து விட்டால் நுகர்வோர்கள் இதனை கடந்து விடுவார்கள்” என்று கூறினார்.