உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, 3 நதிகள் சங்கமிக்கும் இந்த திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையே, இன்று (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு, இதன் எண்ணிக்கை அதிகமானது. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், மகா கும்பமேளாவில் நீராடியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இதையடுத்து, பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். பயனர் ஒருவர், “கடவுள் மீது நம்பிக்கை இல்லாத இந்து வெறுப்பாளர் பிரகாஷ் ராய், கும்பமேளாவை அசுத்தப்படுத்தச் சென்றுள்ளார். மாசு என்றால் என்ன என்று இப்போது எனக்குப் புரிகிறது” எனப் பதிவிட்டிருந்தார். முன்னதாக நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி ஒன்றில், ”எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அதற்கு நேரமுமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான், இணையத்தில் அதுகுறித்து உண்மைச் சம்பவங்களும் சரிபார்க்கப்பட்டன. உண்மையில், அப்படம் ஏஐ தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது என ஊடகங்களும் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், அந்தப் புகைப்படம் போலியானது என்று பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகர் பிரசாந்த் சம்பர்கி, பிரகாஷ் ராஜின் இந்த போலியான புகைப்படத்தை பகிர்ந்து, "அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அகற்றப்படும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், "புனிதமான நிகழ்வில்கூட மதவெறியர்கள் கடைசியாக போலியான செய்திகளை பரப்புகிறார்கள். இதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.