கடந்த ஜுன் 12-ம் தேதி அகமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து நடந்த இரண்டு நாட்களுக்குள் மற்றொரு ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கவிருந்து நூலிழையில் தப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஜூன் 14 அன்று டெல்லியிலிருந்து ஆஸ்த்ரிய நாட்டின் தலைநகர் வியன்னாவுக்கு புறப்பட்ட ஏஐ 187 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயரக் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் தரையில் மோதிவிடக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விம ானிகள் உயரத்தை தக்கவைத்து விபத்தைத் தவிர்த்தனர்.
இந்தப் பயணம் குறித்த விமானக் குழுவினர் அளித்த அறிக்கையில் உயரக் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. DGCA எனப்படும் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் வரை விமானிகள் இருவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 12 அன்று நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்துக்கு பின் ஏர் இந்தியா விமானங்களின் பராமரிப்பு பிரச்சினைகள் தொடர்பாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.