இந்தியா

கேரளா: ஏபிவிபி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது!

webteam

கேரளாவில் ஏபிவிபி நிர்வாகி கொலை வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே கூத்துபரம்பா பகுதியை சேர்ந்தவர் சாம் பிரசாத்(24). பெரவூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வந்த இவர், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் பகுதி நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சாம் பிரசாத்தை, கொம்மேரி என்ற இடத்தில் முகமூடி அணிந்தவாறு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இந்த படுகொலை சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இண்டியா (எஸ்டிபிஐ) கட்சியை சேர்ந்த முகமது (20), சலீம் (26), சமீர் (25) ஹாசிம் (39) ஆகிய 4 பேரை பெரவூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே சாம் பிரசாத் கொலையை கண்டித்து கேரள தலைநகரத்தில் ஏபிவிபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.