இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே!

sharpana

நாட்டின் குளிர்நகரான தலைநகர் டெல்லியில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களையும் வாபஸ் பெறச்சொல்லி கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநில விவசாயிகள்.

இவர்களின் ’டெல்லி சாலோ’ போராட்டத்திற்கு உறுதுணையாக பல மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக்கின்றன. இன்று 8 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் இந்தியா முழுக்க பாரத் பந்த்திற்கு அழைப்பு விடப்பட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக அர்வலர் அன்னா ஹசாரே. கடந்த 2011 ஆம் ஆண்டு வலுவான லோக் பால் சட்டத்தை இயற்றக்கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“விவசாயிகள் நலன்களுக்காக செயல்பட அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும்” என்று கூறியுள்ள ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகன் சித்தி கிராமத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.